உலக அளவில் செயற்கைகோள் அனுப்புவதில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

உலக அளவில் செயற்கைகோள்கள் அனுப்புவதில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.;

Update: 2019-07-21 23:30 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கு.மா.கோவிந்தராசனார் சிலை திறப்பு விழாவுக்கு வந்த சந்திரயான் மற்றும் மங்கள் யான் முன்னாள் திட்ட இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் மூலம் மாணவர்களை உயர்தரமான அறிவியலாளராக உருவாக்கும் வகையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல 16 வகையான திட்டங்களை செயல்படுத்துகிறோம். மாணவர்களிடம் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆசிரியர்களுக்கு காலத்திற்கு ஏற்ற வகையில் பயிற்சி அளிப்பது, படிக்கும்போதே மாணவர்களை கண்டுபிடிப்பாளர்களாக உருவாக்கும் மனப்பான்மையை ஏற்படுத்துவது என அறிவியல் விழிப்புணர்வு முதல் அறிவியலாளராக வரும் வரையிலான திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

சமுதாயத்திற்கும், கல்விக்கும் பணியாற்றிய பெரியவர்களை கவுரவிப்பது மிக முக்கியமானதாகும். இதுபோன்ற நிகழ்வு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழும். அறிவியல் முன்னேற்றம் என்பது விவசாயம் முதல் விண்வெளி வரையில் சமுதாயம் சார்ந்ததாக இருக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ற சமுதாயத்திற்கு ஒத்துப்போக கூடிய கண்டுபிடிப்பு வேண்டும். பிளாஸ்டிக் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு என்றால், அந்த பிளாஸ்டிக்கிற்கு தற்போது மாற்று கண்டுபிடிக்க அறிவியலால்தான் முயற்சி செய்ய வேண்டும்.

சந்திரயான்-2 விண்கலம் நாளை (இன்று) விண்ணில் ஏவப்படுவது மகிழ்ச்சியான செய்தி. நாம் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை அனுப்பி உள்ளோம். உலக அளவில் ராக்கெட் ஏவுதளத்தில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இருப்பினும் செயற்கைகோள்கள் அனுப்புவதில் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.

சந்திரனுக்கு அமெரிக்கா, ரஷ்யாவிற்கு பின்பு நாம் செயற்கைகோள் அனுப்பினாலும் நிலவில் நீர் இருப்பதை நாம்தான் கண்டறிந்தோம். அதேபோல் செவ்வாய்க்கு செயற்கைகோள் அனுப்பினாலும் உலக நாடுகள் செய்யாத வகையில் முதல் முயற்சியிலேயே, மிக குறைந்த செலவில், மிக குறைந்த காலத்தில் வெற்றி அடைந்தோம்.

சந்திரயான்-2 தொழில்நுட்ப ரீதியாக சந்திரனில் மெதுவாக இறங்கும். நிலவின் தென் துருவ பகுதியில் தரை இறங்க உள்ளது. 50 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நிலவுக்கு செல்ல அமெரிக்கா போன்ற நாடுகள் பார்த்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நிலவிற்கு சென்றபோது 7, 8 மணி நேரங்களே இருக்க முடிந்தது. தற்போது நீர் இருப்பதை கண்டறிந்ததால் அங்கேயே தங்கி இருந்து நிரந்தரமாக ஆய்வு கூடம் அமைக்க முடியுமா? என ஆராய கூடிய வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நிலையில் சந்திரயான்-2 தென் துருவ பகுதியில் இறங்குவது ஒரு மைல்கல்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்