பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை தொடர்ந்து நடக்கிறது மந்திரி ரஹீம்கானை இழுக்க ஷோபா எம்.பி. ரூ.30 கோடி பேரம் பேசினார் ஈஸ்வர் கன்ட்ரே பரபரப்பு குற்றச்சாட்டு

பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை தொடர்ந்து நடக்கிறது என்றும், மந்திரி ரஹீம்கானை இழுக்க ஷோபா எம்.பி ரூ.30 கோடி பேரம் பேசியுள்ளதாக காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2019-07-20 23:00 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அதனால் முதல்-மந்திரி குமாரசாமி தானாக முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று அறிவித்தார். பெரும்பான்மை பலம் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எந்த ஒரு அரசும் முன்வராது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தும்படி அரசுக்கு கவர்னர் நெருக்கடி கொடுப்பது சரியல்ல.

பா.ஜனதாவினர் கொடுக்கும் அழுத்தம் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று கவர்னர் கூறுகிறார். பெரும்பான்மையை நிரூபித்து காட்டும்படி முதல்-மந்திரி குமாரசாமிக்கு 2 முறை உத்தரவு பிறப்பித்து கவர்னர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காலதாமதம் ஆவதால் குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் உடனடியாக நடத்தும்படி கவர்னர் தெரிவித்துள்ளார்.

கவர்னர் கூறியபடி குதிரை பேரத்தில் ஈடுபடுவது பா.ஜனதா கட்சியினர் தான். எம்.எல்.ஏ.க்களுக்கு பணம், பதவி ஆசைகளை காட்டி விலை பேசுகிறார்கள். ஆபரேஷன் தாமரை மூலம் 15 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் விலைக்கு வாங்கியுள்ளனர். மாநிலத்தில் கூட்டணி அரசு அமைந்ததில் இருந்து இதுநாள் வரை தொடர்ந்து ஆபரேஷன் தாமரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. மந்திரி ரஹீம்கானை தொடர்பு கொண்டு ரூ.30 கோடி தருவதாகவும், மந்திரி பதவி தருவதாகவும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி.யான ஷோபா பேரம் பேசியுள்ளார்.

அப்படி இருக்கும் பட்சத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடும் பா.ஜனதாவுக்கு கவர்னர் ஆதரவு அளிப்பது ஏன்?. அவர்கள் சொல்வதை கேட்டு பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு நிர்ப்பந்தம் விதிப்பது சரியல்ல. நம்பிக்கை வாக்கெடுப்பு திட்டமிட்டபடி திங்கட்கிழமை நடைபெறும். நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெறும்.
இவ்வாறு ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.

மேலும் செய்திகள்