பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு அதிநவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு அதிநவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லை டவுனை சேர்ந்தவர் வானமாமலை மனைவி லட்சுமி (வயது 50). இவர் முழங்கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு எலும்பு சிகிச்சை பிரிவு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது வலது கால் மூட்டில் தேய்மானம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
இதுகுறித்து டீன் கண்ணன் கூறியதாவது:-
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் முழங்கால் மூட்டு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதை சரிசெய்ய முழுமையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வழக்கமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முழங்கால் மூட்டு தேய்மான நோயை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், தேய்மான பகுதியில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யும் “யுனிகான்டிலர் நீ ஆர்த்தோபிளாஸ்டி” என்ற அதிநவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெளிநாடுகளில் பிரபலம் அடைந்து வருகிறது.
இந்த அறுவை சிகிச்சை தற்போது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் முதன் முறையாக இந்த அதிநவீன அறுவை சிகிச்சை நெல்லையில் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மருத்துவக்கல்லூரி முடநீக்கியல் துறை தலைவர் மணிகண்டன், பேராசிரியர்கள் சுரேஷ்குமார், ஆரோக்கிய அமலன், பாலசுப்பிரமணியன், பழனிகுமார் மற்றும் மயக்கவியல் துறை பேராசிரியர்கள் அமுதாராணி, ஜெபி மாத்தியூ ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை செய்தனர்.
இந்த அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் நமது சொந்த முழங்கால் மற்றும் தசை நார்கள் பாதுகாக்கப்படுகிறது. மேலும் வலி, தோல் கீறல், ரத்த இழப்பு ஆகியவை குறைவாக இருக்கும். விரைவில் குணமடைந்து வீட்டுக்கு சென்று விடலாம். இந்த அறுவை சிகிச்சையை பெரிய தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்தால் ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார். துணை முதல்வர் ரேவதி உடனிருந்தார்.