தூத்துக்குடியில் பயங்கரம்: டாஸ்மாக் பார் ஊழியர் சரமாரி குத்திக்கொலை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் ஊழியர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8-வது தெருவை சேர்ந்தவர் குட்டி என்ற நரசிம்மன் (வயது 39). இவர் தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்தார். அந்த பாரின் அருகே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். நரசிம்மனுக்கு திருமணமான சில ஆண்டுகளில் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் நரசிம்மன் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மீன்பிடி தொழில் செய்து வரும் தூத்துக்குடி வடக்கு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சகிலன் (22), சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரோசாரி மகன் டைட்டஸ் (22), தாளமுத்துநகர் தந்தை பெரியார் நகரை சேர்ந்த மாடசாமி மகன் மதன்குமார் (22), டிரைவரான பிரமுத்துவிளையை சேர்ந்த முருகன் மகன் ஆனந்த் (29), மைக்கேல் உள்பட 6 பேர் டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க வந்தனர்.
அவர்கள் மது குடித்து விட்டு பணம் கொடுக்க மறுத்தனர். அப்போது அங்கு இருந்த நரசிம்மன் இதை தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் உருவானது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நரசிம்மன், செல்வநாயகபுரத்தில் தான் தங்கி உள்ள அறையின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் சகிலன், டைட்டஸ், மதன்குமார், ஆனந்த், மைக்கேல் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் திடீரென்று மறைத்து வைத்து இருந்த கத்தியால் நரசிம்மனை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த நரசிம்மன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். பின்னர் அவர்கள் 6 பேரும் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் நரசிம்மனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் நரசிம்மன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சகிலன், மதன்குமார் உள்ளிட்ட 5 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட நரசிம்மன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் குற்றவாளிகள் பட்டியலிலும் வைத்து போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் ஊழியர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.