தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி கோப்புகள் மாயம்
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி கோப்புகள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான சில கோப்புகள் மாயமானதாக தகவல்கள் வெளியானது. இதனால் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலனிடம் கேட்ட போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.8 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான கோப்புகள் எங்கு வைக்கப்பட்டு உள்ளது என்பது தெரியவில்லை. அந்த கோப்புகள் 3 நாட்களுக்குள் கண்டுபிடிக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அலுவலருக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கோப்புகள் காணாமல் போனாலும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த கோப்புகள் முழுமையாக கம்ப்யூட்டரில் உள்ளது.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த ஞானசேகரன் கிழக்கு மண்டலத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த ஒரு மாதமாக அவர், கோப்புகளை ஒப்படைக்காமல் உள்ளார். இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்” என்று கூறினார்.