மதகடிப்பட்டு ஏரிக்கரை அருகே புதிய சாராயக்கடை சூறை; கிராம மக்கள் அடித்து நொறுக்கினர்

மதகடிப்பட்டு ஏரிக்கரை அருகே புதிதாக சாராயக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கடையை அடித்து நொறுக்கி சூறையாடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-20 22:45 GMT

திருபுவனை,

திருபுவனை அருகே மதகடிப்பட்டு ஏரிக்கரையையொட்டி ஏராளமான வீடுகள் உள்ளன. மேலும் ஏரி தண்ணீரால் பலன்பெறும் விவசாய நிலங்களும் அந்த பகுதியில் அமைந்துள்ளன. இந்த பகுதியில் ஒரு மதுக்கடை உள்ளது.

அந்த மதுக்கடைக்கு வருபவர்கள் அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதுடன், அவர்களால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதனால் அந்த மதுக்கடையை அப்புறப்படுத்துமாறு அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் அந்த மதுக்கடை அருகிலேயே புதிதாக ஒரு சாராயக்கடை நேற்று திறக்கப்பட்டது. அதுபற்றிய தகவல் அந்த பகுதியில் பரவியதும், மதகடிப்பட்டு புதுநகர், கோகுல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆத்திரமடைந்தனர். அப்பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100–க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டு வந்தனர்.

கடைக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த சாராய பாட்டில்கள், சாராய கேன்கள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். அதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இதுபற்றி தகவல் அறிந்து திருபுவனை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் பொதுமக்கள் ஆவேசமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே உள்ள மதுக்கடையால் பிரச்சினை இருந்து வரும் நிலையில் தற்போது அங்கு புதிதாக மேலும் ஒரு சாராயக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் மது குடிக்க வருபவர்களால் தொல்லைகள் அதிகரிக்கும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பிரியா சமாதானப்படுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து கலால்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து சாராயக்கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கிராம மக்களால் சாராயக்கடை சூறையாடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்