ரவுடி கொலையில் 7 பேர் கைது; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-20 23:15 GMT
மதுரை,

மதுரை கரும்பாலை நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 25). ரவுடியான இவர் மீது நகரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன் தினம் இரவு ராஜசேகர், மதிச்சியம் பகுதியில் உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை வெட்டினர். இதில் நிலை குலைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குத்தூண் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தும் விசாரித்து வந்தனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கரும்பாலை பி.டி. காலனியை சேர்ந்த சந்திரபாண்டி (41), முருகன் (40), பாண்டியராஜன் (28), ஆறுமுகம் (23), வினோத் (18), பிரேம்குமார் (18), மாரிமுத்து (18) ஆகிய 7 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட ராஜசேகருக்கும், கைது செய்யப்பட்ட சந்திரபாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்திரபாண்டியை அரிவாளால் வெட்டி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக ராஜசேகரை கொலை செய்ய சந்திரபாண்டி திட்டம் தீட்டி அதனை தற்போது அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணி, காமாட்சி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே மதுரை பெரிய ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ள ராஜசேகரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் அங்குள்ள பிரதான சாலையில் மறியல் செய்வதற்காக திரண்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் கூறுகையில், ‘கொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல், வேறு சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். உண்மை குற்றவாளிகளை கைது செய்த பின்னரே உடலை வாங்குவோம்” என தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் உடலை பெற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்