ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: ராமநாதபுரத்தில் வீடுகளில் கருப்புக்கொடி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.

Update: 2019-07-20 23:00 GMT
ராமநாதபுரம்,

காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி மரக்காணம் முதல் ராமேசுவரம் வரை கருப்புக்கொடி ஏந்தி போராடுவது என்று பேராபத்திற்கு எதிரான பேரியக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் இந்த இயக்கத்தின் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி தங்களின் எதிர்ப்பை காட்டினர்.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் அண்ணாநகர் பகுதியில் பேராபத்திற்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.

காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.

மேலும் முகத்தில் கருப்புத்துணி கட்டியும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், பேராபத்திற்கு எதிரான பேரியக்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

மேலும் செய்திகள்