சிதம்பரத்தில் பரபரப்பு: போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
சிதம்பரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டத்தில் கடலூர் புதுநகர், சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஆரோக்கியராஜ். தற்போது இவர் சென்னை மதுராந்தகத்தில் மதுவிலக்கு அமல் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவரது குடும்பத்தினர் சிதம்பரம் அண்ணாமலை நகர் மண்ரோட்டில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். விடுமுறையில் அவ்வப்போது இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தனது வீட்டிற்கு வந்து செல்வார். இந்த நிலையில் இவர் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜா சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம் உள்பட 6 போலீசார் மண்ரோட்டில் உள்ள ஆரோக்கியராஜ் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்தனர். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்ற போலீசார், உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் போலீசார் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதியில் அதிகளவில் திரண்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. சுமார் 14 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
இதில் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றி சென்றதாக தெரிகிறது. இதனால் போலீஸ் குடியிருப்பு பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.