‘கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு அடிப்படை வசதி செய்துதர வேண்டும்’ பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
விழுப்புரம்,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வள்ளல்பாரி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் சக்திவேல், துணைத்தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாக்கியராஜ் வரவேற்றார். நிறுவனர் துரை.ராச மாணிக்கம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், இன்றைய பணிகளின் தன்மை, தேவைகளை அனுசரித்தும், குடும்ப நலன் கருதியும், உரிய கட்டமைப்பு செய்து தரப்படும் 5 கிலோ மீட்டர் அளவில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கி பணியாற்ற அரசு பரிசீலிக்க வேண்டும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்து ஊதிய உயர்வு, பதவி உயர்வு, மாவட்ட மாறுதல் ஆகியவற்றை வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மின்சார வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உதயமாக உள்ளதால் மாவட்ட மாறுதல், கோட்ட மாறுதல்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் மோகனரங்கன், பொருளாளர் அழகிரிசாமி, துணைத்தலைவர்கள் பொய்யாமொழி, செந்தில்நாதன், முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் மாநில தலைமை நிலைய செயலாளர்கள் ராமன், பன்னீர்செல்வம், வடக்கு மண்டல மாநில செயலாளர் பாஸ்கரன், முன்னாள் மாநில தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இணை செயலாளர் கேசவன், அமைப்பு செயலாளர் புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் செய்தி தொடர்பாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.