அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-07-20 22:45 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க குமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர், வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் முத்துக்குமார் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.

சங்க மாநில செயலாளர் எட்வர்டு ஜெபசீலன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தியாகராஜன் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். மாநில தலைவர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மத்திய அரசு பணியாளர்கள் பெற்றதுபோல 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள கணினி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களும், பணி ஓய்வு பெற்றவர்களும் பாராட்டப்பட்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

பின்னர் மாநில தலைவர் செல்வராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டங்கள் நடத்தினோம். மக்கள் நலன், மாணவர்கள் நலன் சார்ந்து போராட்டத்தை ஒத்தி வைத்தோம். தொடர்ந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தினக்கூலி, மதிப்பூதியம் என்ற பல்வேறு நிலைகளில் பணியாற்றுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

புதிய கல்வி கொள்கையில் எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக மாநில அரசு, ஆசிரியர் சங்கத்தினரையும், எங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சட்டசபை கூட்டம் முடிந்ததும் எங்களது கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூறி உள்ளனர். பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்