திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன் வினியோகஸ்தர்களிடம் ரூ.1½ கோடி மோசடி தனியார் நிறுவன மேலாளர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன் வினியோகஸ்தர்களிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த தனியார் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர்.;
திருவண்ணாமலை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சத்தியசாய் நகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 34). இவர், ஆரணி ராட்டிணமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் அலுவலக கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வந்தவாசி பகுதியை சேர்ந்த தனியார் செல்போன் வினியோகஸ்தர் சீனுவாசன் (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து தனியார் செல்போன் விற்பனை தொடர்பாக நேரடியாக பேச வேண்டும் என்று சுதாகர், சீனுவாசனை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து சீனுவாசன் கடந்த மார்ச் மாதம் சுதாகரை நேரில் சந்திக்க ஆரணியில் உள்ள தனியார் செல்போன் அலுவலகத்திற்கு சென்று உள்ளார்.
அப்போது சுதாகர் எங்களிடம் தனியார் செல்போனுக்கு ‘ஹெல்மெட்’ சலுகை உள்ளது என்றும், இதன் மூலம் நிறைய லாபம் பெறலாம் என்றும் சீனுவாசனிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும் இதற்கு நீங்கள் தேவைப்படும் செல்போனிற்கான பணத்தை முன்பே செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பி சீனுவாசன், சுதாகரின் வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் செலுத்தி உள்ளார். ஆனால் சுதாகர் பணத்தை பெற்றுக்கொண்டு சீனுவாசனுக்கு செல்போன் கொடுக்கவில்லை. மேலும் அவர் கொடுத்த பணத்தையும் திரும்பி கொடுக்கவில்லை.
இதுகுறித்து சீனுவாசன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமன், ராமலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சீனுவாசன் மட்டுமின்றி தனியார் செல்போன் வினியோகஸ்தர்களாக உள்ள ஆரணி பாளையத்தை சேர்ந்த மோகன்குமாரிடம் ரூ.63 லட்சத்து 60 ஆயிரம், செய்யாறை சேர்ந்த மகேஷ்குமாரிடம் ரூ.3 லட்சம், திருவண்ணாமலையை சேர்ந்த குமரனிடம் ரூ.22 லட்சத்து 25 ஆயிரம், ஆரணியை சேர்ந்த ராஜேஷிடம் ரூ.14 லட்சம், போளூரை சேர்ந்த செல்வகணபதியிடம் ரூ.5 லட்சத்து 75 ஆயிரம், சேத்துப்பட்டை சேர்ந்த பழனிசாமியிடம் ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 51 லட்சத்தை பெற்றுக்கொண்டு செல்போனும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை நேற்று கைது செய்தனர்.