சேலம் கொண்டலாம்பட்டியில் குடிபோதையில், கால்வாய்க்குள் தவறி விழுந்து காவலாளி சாவு

சேலத்தில் குடிபோதையில் காவலாளி ஒருவர், கால்வாய்க்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-07-20 22:30 GMT
சேலம், 

சேலம் கொண்டலாம்பட்டி ஈச்சமரக்காடு பெரியபுதூரை சேர்ந்தவர் சீமான் என்கிற சுந்தர்ராஜ் (வயது 55). இவர், அதேபகுதியில் உள்ள கிரானைட்ஸ் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 16-ந் தேதி மாலை வேலைக்கு சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி செவ்வந்தியம்மாள் மற்றும் உறவினர்கள் சுந்தர்ராஜை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது பற்றிய விவரம் தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக அவர்கள் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுந்தர்ராஜை தேடி வந்தனர்.

இந்தநிலையில், கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பால பகுதியில் சுந்தர்ராஜின் சைக்கிள் மற்றும் ஒரு ஜோடி செருப்பு, டிபன் பாக்ஸ், காலி மதுபாட்டில் ஆகியவை கிடந்ததை நேற்று அவரது உறவினர்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுபோதையில் காவலாளி சுந்தர்ராஜ் எங்கேயும் விழுந்திருப்பாரா? என்ற கோணத்தில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது கதி என்ன? என்பது புரியாத புதிராக இருந்தது.

இதனிடையே, மதியம் 12 மணியளவில் கொண்டலாம்பட்டி மேம்பாலம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுநீர் கால்வாய்க்குள் காவலாளி சுந்தர்ராஜ் தவறி விழுந்து இறந்தநிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த கொண்டலாம்பட்டி மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் அங்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இறந்த அவரது உடலை மீட்டனர். இதை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சுந்தர்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து சம்பளத்துடன் வீடு திரும்பிய சுந்தர்ராஜ், வரும்வழியில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலை வாங்கி வந்துள்ளார். பின்னர் அவர், கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் சாக்கடை கால்வாய் மீது அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அளவுக்கு அதிகமாக போதை ஏறியதால் நிலைதடுமாறி சாக்கடை கால்வாய்க்குள் விழுந்ததில் அவர் உயிரிழந்திருக்கலாம், என போலீசார் தெரிவித்தனர். குடிபோதையில் கால்வாய்க்குள் தவறி விழுந்து காவலாளி ஒருவர் இறந்த சம்பவம் கொண்டலாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்