வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என நாமக்கல்லில் நடந்த தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2019-07-20 22:30 GMT
நாமக்கல், 

தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பட்டீசுவரன், மாநில ஆலோசகர் சங்கய்யா, துணை செயலாளர் ஜமால் மொய்தீன், இணை செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தேங்காய் கொள்முதல் செய்ய அரசு சார்பில் கொள்முதல் மையங்கள் ஏற்படுத்தி, உரிய விலை கொடுத்து தேங்காயை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடக்க வேளாண்மை வங்கி மூலம் கொப்பரை தேங்காய்களை உடனடியாக கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை விவசாயிகளுக்கும், ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேங்காய் மற்றும் அதன் உப பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்ய தாலுகா வாரியாக தொழிற் கூடங்கள் அமைக்க வேண்டும். தேங்காய் மற்றும் அதன் சார்பு பொருட்களுக்கு உரிய சேமிப்பு கூடங்கள் அமைத்து கொடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ராமசாமி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்