வேலூர் சிறையில் இருந்து பரோலில் நளினி இன்று வருகை? மகள் திருமண ஏற்பாடு குறித்து முருகனுடன் பேச்சு

வேலூர் ஜெயிலில் இருந்து நளினி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரோலில் வெளியே வருகிறார். முன்னதாக அவர் நேற்று முருகனை சந்தித்த போது இருவரும் மகள் திருமண ஏற்பாடு குறித்து பேசினர்.

Update: 2019-07-20 22:30 GMT

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர்களுடைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ய 6 மாதம் பரோல் கேட்டு நளினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் நளினி கடந்த 5–ந் தேதி நேரில் ஆஜராகினார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. நளினி பரோலில் செல்லும் போது அவர் தங்க இருக்கும் இடத்தை சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி நளினி பரோலில் செல்லும் போது தங்குவதற்கு வேலூர் சத்துவாச்சாரியில் வாடகைக்கு வீடு பார்க்கப்பட்டுள்ளது. அவர் பரோலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை (திங்கட்கிழமை) ஜெயிலில் இருந்து வரலாம் என்றும் சென்னை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து இதற்கான உத்தரவு வந்தவுடன் பரோலில் நளினி விடுவிக்கப்படுவார் எனவும் வேலூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வேலூர் பெண்கள் ஜெயிலில் நேற்று நளினி–முருகன் சந்திப்பு நடந்தது. காலை 9.20 மணிக்கு முருகன் ஆண்கள் ஜெயிலில் இருந்து போலீசாரின் பலத்த காவலுடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 1 மணி நேரம் அவர், நளினியிடம் பேசினார். அப்போது அவர்கள் மகள் திருமணம் குறித்து உருக்கமாக பேசியதாகவும், திருமணத்தில் கலந்து கொள்ள பரோல் கேட்டு முருகன் விண்ணப்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நளினி பரோலில் வருவதையொட்டி வேலூர் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்