பொய்க்கும் பருவ மழை மரத்வாடா மாவட்டங்களில் நீடிக்கும் வறட்சி 25-ந் தேதி முதல் செயற்கை மழை பெய்விக்க ஏற்பாடு

மரத்வாடா மண்டலத்தில் பருவ மழை பொய்த்து வருவதால் வறட்சி தொடர்கிறது. தண்ணீர் பஞ்சத்தால் பொதுமக்கள் திண்டாடும் நிலையில், வருகிற 25-ந் தேதி முதல் செயற்கை மழையை பெய்விக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2019-07-19 23:15 GMT
அவுரங்காபாத்,

மரத்வாடா மண்டலத்தில் ஜல்னா, அவுரங்காபாத், பர்பானி, ஹிங்கோலி, நாந்தெட், லாத்தூர், உஸ்மனாபாத், பீட் ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்கள் விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ளன. ஆனால் தொடர் வறட்சி மற்றும் கடன் தொல்லை இங்குள்ள விவசாயிகளின் உயிரை தொடர்ந்து பறித்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை அதிகம் நடைபெறும் இந்த மண்டலத்தில் இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து வருகிறது.

மழைக்காலம் தொடங்கியதற்கான அறிகுறியே தெரியாத வண்ணம் இங்குள்ள மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அப்படியே அதிசயமாக மழை பெய்தாலும் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கிறது.

இந்த ஆண்டு மரத்வாடா மண்டலத்தில் 49 சதவீத மழையாவது பொழியும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இதுவரை மரத்வாடாவில் 16 சதவீத மழை மட்டுமே பெய்துள்ளது. அதுமட்டும் இன்றி மண்டலத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் வறண்டு தண்ணீர் இன்றி காட்சி தருகின்றன.

நடவு பணி

வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க சுமார் 2 ஆயிரத்து 200 தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் நீர்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நிலவும் வறட்சி விவசாயிகளிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பருவமழையை நம்பி ஏற்கனவே 48 சதவீத நடவு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், அவை காய்ந்து கருகிப்போகும் என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

மரத்வாடா மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் சராசரியாக 126 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.

அதிகபட்சமாக அவுரங்காபாத்தில் 145 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக பீட் மாவட்டத்தில் 96 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இதேநிலை நீடித்தால் வறட்சியின் பிடியில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பும் மராத்வாடா மண்டலத்திற்கு கிடைக்காது என அஞ்சப்படுகிறது.

செயற்கை மழை

இந்த நிலையில் உஸ்மனாபாத் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், மரத்வாடா மண்டலத்தில் வறட்சியை சமாளிக்க செயற்கை மழை பெய்விக்க அரசு ஏற்பாடு செய்து இருப்பதாக தெரிவித்தார்.

வருகிற 25-ந் தேதி முதல் இந்த பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்