சட்டமன்ற தேர்தலில் மும்பையில் 36 தொகுதிகளையும் பா.ஜனதா- சிவசேனா கைப்பற்ற வேண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
மும்பையில் உள்ள 36 தொகுதிகளையும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.;
மும்பை,
மும்பை பா.ஜனதா தலைவராக இருந்த ஆஷிஸ் செலார் சமீபத்தில் மந்திரி பதவி ஏற்றார். இதையடுத்து கட்சியின் மும்பை தலைவர் பதவி மங்கள் பிரபாத் லோதா எம்.எல்.ஏ.வுக்கு வழங்கப்பட்டது. அவர் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இதனால் மும்பையில் உள்ள 36 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும். இதற்காக கட்சியினர் பூத் மட்டத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலின் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரதமர் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ஆனால், மக்களின் தீர்ப்பு மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று அமைந்தது. யாருடைய சிறந்த பணி பேசுகிறதோ, அவர்கள் அதிகம் பேச தேவையில்லை. அவருக்கு எதிராக எவ்வளவு பேசப்பட்டாலும், அவர்கள் பின்னால் மக்கள் நிற்பார்கள்.
மும்பையை புறக்கணித்தனர்
மும்பை நகர வளர்ச்சியை 15 ஆண்டு காலம் ஆட்சி செய்த முந்தைய கூட்டணி அரசு புறக்கணித்தது. ஆனால் நமது அரசு ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளது. முந்தைய அரசின் அலட்சியம் காரணமாக தான் மும்பையில் கட்டிட விபத்துகள் நடக்கின்றன. பாழடைந்த கட்டிடங்களை கட்டாயம் சீரமைக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.