தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தின் கீழ் இருதய நோய் கண்டறியும் முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தின் கீழ் இருதய நோய் கண்டறியும் முகாமை கலெக்டர் எஸ்.சிவராசு தொடங்கி வைத்தார்.;

Update: 2019-07-19 23:03 GMT
திருச்சி,

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மூலம் தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தின் கீழ் இருதய நோய் கண்டறியும் முகாம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. முகாமிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் தேசிய பள்ளி சிறார் குழந்தைகள் நலத்திட்டம் 14 வட்டாரங்களிலும், ஒரு வட்டாரத்திற்கு 2 குழு அளவில் 28 மருத்துவக் குழுக்களும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், மருந்தாளுனர் ஆகியோர் இடம் பெற்று இருப்பார்கள்.

இவர்கள், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆகியவற்றில் படிக்கும் குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகள், நோய் தாக்கம், ஊட்டச்சத்து குறைபாடுகள், உள்ளிட்ட 40 விதமான சுகாதார காரணிகள் அடிப்படையில் பரிசோதனை செய்வார்கள்.

மேலும் அதற்கான சிகிச்சையும், மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள மாவட்ட இடையூட்டு சேவை மையத்திற்கு அனுப்பப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இருதய நோய் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் தொடர் சிகிச்சைக்கு மருத்துவர்களின் ஆலோசனையின்படி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இளம் வயதிலேயே இருதய நோய் தொடர்பாக கண்டறியப்பட்ட நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் சாதாரண குழந்தைகளை போல் இந்த குழந்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்