கர்நாடகத்தில் கடலோர, தென் மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு தட்சிண கன்னடாவில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-07-19 22:39 GMT
மங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் பருவமழை தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் மாநிலத்தில் போதிய மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை.

பருவமழை தொடங்கியதில் இருந்து மலைநாடு என்றழைக்கப்படும் குடகு மாவட்டத்தில் தான் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக குடகு, கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

‘ஆரஞ்ச் அலார்ட்’

குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் ஏராளமான கிராமங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு இல்லாததால் பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினத்தில் இருந்து 22-ந்தேதி வரை குடகில் மிக அதிக கனமழை பெய்யும் என்று கர்நாடக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்காக குடகு மாவட்டத்தில் ‘ஆரஞ்ச் அலார்ட்’ (இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிலைமை மிகவும் மோசமானதாக மாறலாம் என்பதை குறிக்கும்) விடுக்கப்பட்டிருந்தது. குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த 3 நாட்களும் கடலோர மாவட்டங்களில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும் 3 நாட்களிலும் சுமார் 200 மில்லி மீட்டர் மழை பதிவாகவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை தென்கர்நாடகத்தில் உள்மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மிக அதிகளவு பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் குடகு மற்றும் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கி கிடக்கின்றன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

குடகு மாவட்டத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் காற்று அதிகமாக வீசும் என்பதால் இன்று முதல் 3 நாட்கள் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று (சனிக்கிழமை) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் உத்தரவிட்டுள்ளார்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

இதுகுறித்து கலெக்டர் சசிகாந்த் செந்தில் கூறுகையில், கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், தட்சிண கன்னடா மாவட்டத்தில் 3 நாட்களும் 200 மி.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தட்சிண கன்னடா மாவட்டத்தில் நாளை (அதாவது இன்று) பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலிலும் காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம். இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள 3 நாட்களும் சுற்றுலா பயணிகள் கடலின் அருகே செல்ல வேண்டாம். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் 1077 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

மேலும் செய்திகள்