கொடைக்கானல் மலைப்பகுதியில் பேரிக்காய் விளைச்சல் அமோகம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் பேரிக்காய் அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளது.

Update: 2019-07-19 22:45 GMT
கொடைக்கானல்,

பேரிக்காய் எனப்படுவது தாவர பேரினத்தில் உள்ள உண்ணத்தக்க ஒரு பழத்தினை குறிக்கும் சொல்லாகும். சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் ஒரு சில மலை பிரதேசங்களிலும், இந்தோனேசியா போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் மொத்தம் 30 வகையான பேரிக்காய்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மிதமான தட்ப வெப்பம் நிறைந்த மற்றும் குளிரான பகுதிகளில் இந்த பேரிக்காய் விளைகிறது.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பேரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செண்பகனூர், அப்சர்வேட்டரி, வட்டக்கானல், வில்பட்டி, பெரும்பள்ளம், அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாட்டு பேரி, முள்பேரி, தண்ணீர் பேரி, ஊட்டி பேரி, வால்பேரி போன்ற வகைகள் விளைந்து வருகின்றன.

கொடைக்கானலில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் பேரிக்காய் சீசன் இருக்கும். மலச்சிக்கல் நீங்கி, நீர்ச்சத்து பெருகும் மருத்துவ குணம் பேரிக்காயில் உள்ளது. மற்ற நாடுகளில் விளையும் பேரியை விட கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் பேரிக்கு சுவை அதிகம் உண்டு. தற்போது தோட்டங்களில் அமோக விளைச்சல் அடைந்துள்ளதால் காய்த்து குலுங்குகின்றன.

இதனால் இங்கு விளைவிக்கப்படும் பேரிக்காய்கள் தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. விளைச்சல் மற்றும் ரகத்திற்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ நாட்டு பேரிக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், தண்ணீர் பேரிக்காய் ரூ.80 முதல் ரூ.100 வரைக்கும் விற்பனை ஆகிறது. விளைச்சல் அதிகரித்தபோதிலும் போதுமான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வரும் மாதங்களில் இதன் விலை மேலும் உயரும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்