கொரடாச்சேரி அருகே, பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் அந்தரத்தில் தொங்கிய கார்

கொரடாச்சேரி அருகே பாலம் திடீரென இடிந்து விழுந்ததால், அந்தரத்தில் கார் தொங்கியது. இதில் கணவன்-மனைவி உள்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2019-07-19 22:30 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் ஊராட்சி ஆனைவடபாதி என்ற இடத்தில் வாளவாய்க்கால் ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. 6 அடி அகலம் கொண்ட இந்த பாலம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் கார் உள்பட சிறிய வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். இந்த பாலம் பழுதடைந்து இருந்ததால் அதை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பெருந்தரக்குடி ஊராட்சி சார்வான் என்ற கிராமத்தை சேர்ந்த தணிகாச்சலம்(வயது 45) என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் அம்மையப்பன் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை வெங்கடேஷ் என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் சென்ற கார், ஆனைவடபாதி பாலத்தின் வழியாக சென்றபோது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் கார் வாளவாய்க்காலுக்குள் விழுந்தது.

இந்த விபத்தில் காரில் சென்ற தணிகாச்சலம், அவருடைய மனைவி சாரதா(40), தினேஷ்(11), கார் டிரைவர் வெங்கடேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். பாலம் உடைந்து கார் விபத்தில் சிக்கியதை அறிந்த கிராம மக்கள் உடனடியாக அங்கு ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தீயணைப்புதுறையினரும், கொரடாச்சேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றுக்குள் விழுந்த காரை மீட்டனர்.

இந்த பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பாலம் இடிந்து விழுந்ததால் பெருந்தரக்குடி, புலியூர், தேவர்கண்டநல்லூர், குளிக்கரை பகுதி மக்கள் அம்மையப்பன் வழியாக தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே உடனடியாக பாலத்தை புதிதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்