கத்தியைக்காட்டி மிரட்டி 3 பேர் காரில் கடத்தல்; ஓய்வு பெற்ற வன அதிகாரி பேரனுடன் கைது
ராமநாதபுரத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை காரில் கடத்தி சென்ற ஓய்வு பெற்ற வனஅதிகாரியை பேரனுடன் போலீசார் கைது செய்தனர்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் பெரியகருப்பன் நகரை சேர்ந்த சண்முகவேல் (வயது45) என்பவரின் மகள் பிரதிபா(20). இவர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது தந்தை சண்முகவேல் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நான் கோவையில் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக பணியாற்றி வருகிறேன்.
கடந்த 17-ந் தேதி ராமநாதபுரம் பெரியகருப்பன் நகரில் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது.
எனது தந்தை சண்முகவேல், தாயார் பாண்டியம்மாள்(41), அக்காள் கமலி(21) ஆகியோரை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கத்தியைக் காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுவிட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் கோவையில் இருந்தவாறே ராமநாதபுரம் ஹலோ போலீசுக்கு தகவல் தெரிவித்தேன்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். என்னிடம் போனில் பேசி பணம் கேட்டு மிரட்டிய நபர் குறித்து சந்தேகம் உள்ளது. எனது தந்தையை ஓய்வு பெற்ற வன அதிகாரி ஜெயபாலன் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
ஜெயபாலன் ஏற்கனவே நாங்கள் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் குடியிருந்தபோது பழக்கமானவர். எனவே, அவரிடம் சிக்கி உள்ள எனது குடும்பத்தினரை மீட்டுத்தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஓம்பிரகாஷ்மீனா சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையிலான தனிப்படையினர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தனிப்படையினர் நர்சு பிரதிபா மூலம் மேற்கண்ட கடத்தல்காரர்களிடம் செல்போனில் பேச வைத்து கடத்தல்காரர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.
இந்த விசாரணையில் ஓய்வு பெற்ற வனஅதிகாரி ஜெயபாலன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அடைக்கன்பட்டி பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் மேற்கண்ட 3 பேரையும் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
போலீசார் அங்கு விரைந்து சென்று ஜெயபாலன்(63), அவரின் பேரன் விக்னேஷ்(25) ஆகியோரை பிடித்து கடத்தி வைக்கப்பட்டிருந்த 3 பேரையும் மீட்டு கொண்டு வந்தனர்.
அவர்களிடம் ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையில் ஜெயபாலன் தொண்டியில் வனஅதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஓய்வு பெற்றாராம்.
அப்போது அவருக்கு கிடைத்த பணத்தில் ரூ.9 லட்சத்து 60 ஆயிரத்தினை சண்முகவேல் வாங்கியிருந்தாராம். இந்த பணத்தினை திரும்ப கேட்டபோது தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் பணத்தை வாங்குவதற்காக கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.