மராட்டிய சட்டசபை தேர்தலில் வாக்கு சீட்டு முறை பயன்படுத்தப்பட வேண்டும் அஜித் பவார் வலியுறுத்தல்

மராட்டிய சட்டசபை தேர்தலில் வாக்கு சீட்டு முறை பயன்படுத்தப்பட வேண்டும் என அஜித் பவார் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-07-19 22:00 GMT
மும்பை,

நாடாளுமன்ற தேர்தலின்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக கருத்து கூறினர். எனினும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை காரணம் சொல்லக்கூடாது என கூறினார்.

சமீபத்தில் சில மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பா.ஜனதாவை தவிர காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளும் வெற்றி பெற்று உள்ளன எனவும் கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் தேர்தலில் வாக்கு சீட்டு முறை பயன்படுத்தப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஜனநாயகத்தை பலப்படுத்தவும், தேர்தல் முறையில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் வர இருக்கும் மராட்டிய சட்டசபை தேர்தலை வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தி நடத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். பல வளர்ந்த நாடுகள் கூட வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தி தான் தேர்தலை நடத்துகின்றன. இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்