காங்கேயத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

காங்கேயத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-07-19 23:00 GMT

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் திரு.வி.க.நகரை சேர்ந்தவர் புகழேந்திரன். இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வித்யா. இவர் வீட்டிலேயே தறி போட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவர்களது மூத்த மகன் மல்லிகார்ஜுனன்(14) காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறான். இளைய மகன் சித்தீஸ் அங்குள்ள பாரதியார் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டு குழாயில் காவிரி குடிநீர் வந்து உள்ளது. இதையடுத்து வித்யா குடங்களில் தண்ணீரை பிடித்தார். அதன்பிறகு தண்ணீர் வீணாகி விடக்கூடாது என்பதற்காக வீட்டு குழாயில் இருந்து பிளாஸ்டிக் குழாய் மூலம் வீட்டு முன் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியை நிரப்பினார். தண்ணீர் நிரப்பப்பட்ட குடங்களை ஒவ்வொன்றாக எடுத்து கொண்டு வித்யா சமையல் அறைக்கு கொண்டு சென்றுவைத்தார்.

அந்த நேரத்தில் வீட்டில் இருந்த மாணவன் சித்தீஸ் வெளியே வந்து தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் குழாயை வெளியே எடுத்து தன்னுடைய கேனில் தண்ணீரை பிடித்துக்கொண்டு இருந்தான். மாணவனின் அண்ணன் மல்லிகார்ஜுனன் அதை வேடிக்கை பார்த்து கொண்டு நின்றிருந்தான்.

கேனில் தண்ணீர் பிடித்த சித்தீஸ் எதிர்பாராமல் கால் தவறி 5 அடி ஆழமுள்ள தரைமட்ட தொட்டிக்குள் விழுந்து விட்டான். இதை பார்த்த மல்லிகார்ஜுனன் சத்தம் போட்டான். உடனே வெளியே வந்த வித்யா, தனது மகன் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடப்பதை பார்த்து பதறினார்.

பின்னர் தொட்டிக்குள் இறங்கி மகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவன் சித்தீஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ‘ஐயோ! தண்ணீர் குடத்தை வீட்டுக்குள் எடுத்து வைத்து விட்டு வருவதற்குள் என் மகனை பறி கொடுத்து விட்டேனே’ என கூறி வித்யா கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்