நவிமும்பையில் 3 பேரை படுகொலை செய்த அண்ணன்- தம்பி கைது கேலி செய்ததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்

நவிமும்பையில் 3 பேரை படுகொலை செய்த அண்ணன்- தம்பியை போலீசார் கைது செய்தனர். கேலி கிண்டல் செய்ததால் தீர்த்து கட்டியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

Update: 2019-07-19 21:51 GMT
மும்பை,

நவிமும்பை துர்பேயில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் ஒருவரிடம் தொழிலாளர்களாக இருந்த இர்சாத் (வயது20), அவரது தம்பி நவ்சாத் (19), ராஜேஸ் (28) ஆகிய மூன்று பேர் துர்பே எம்.ஐ.டி.சி.யில் உள்ள குடோனுக்குள் கடந்த சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த படுகொலை சம்பவம் நவிமும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர்களுடன் வேலை பார்த்த செபுகான் (வயது25), அவரது தம்பி செருகான் (24) ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து அவர்களை கொலை செய்துவிட்டு சொந்த ஊரான மத்திய பிரதேசத்துக்கு தப்பி சென்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் நவிமும்பைக்கு கொண்டு வரப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தனர்.

அதன்படி, கொலையான 3 பேரும் தங்களுடன் வேலை பார்த்து வந்த செபுகானை கேலி கிண்டல் செய்தும், அடித்து உதைத்தும் துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த அவர் அண்மையில் வேலையில் இருந்து நின்று விட்டார். மத்திய பிரதேசம் சென்ற அவர் 3 பேரால் தான் துன்புறுத்தப்பட்டது பற்றி தம்பி செருகானிடம் கூறி பழி வாங்க திட்டமிட்டார்.

அதன்படி சம்பவத்தன்று துர்பே வந்த அவர்கள் மேற்படி குடோனில் வைத்து 3 பேரையும் அரிவாளால் வெட்டியும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாக கொன்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை வருகிற 30-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்