நல்லம்பல் ஏரி ரூ.1½ கோடி செலவில் தூர்வாரப்படும் - அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்

மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின்கீழ் திருநள்ளாறை மேம்படுத்த மேலும் ரூ.9 கோடி நிதி கிடைத்துள்ளது, அதில் நல்லம்பல் ஏரி ரூ.1½ கோடி செலவில் தூர்வாரப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

Update: 2019-07-19 22:30 GMT
காரைக்கால்,

திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட வளத்தாமங்கலம் கிராமத்தில் நீண்ட காலமாக ஆற்றங்கரையோரம் வசித்து வருபவர்கள் இலவச மனைப்பட்டா கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனி உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் கமலக்கண்ணன் வளத்தாமங்கலம் கிராமத்துக்கு சென்று, மக்களை சந்தித்து மனைப்பட்டா வழங்குவது குறித்து பேசினார்.

இது பற்றி அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வளத்தாமங்கலம் கிராமத்தில் ஆற்றங்கரையோரம் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்கள் மனைப்பட்டா கேட்டு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆற்றங்கரையோரம் இருப்பதை காரணம் காட்டி பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களின் தற்போதைய நிலை குறித்தும், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி, வலியுறுத்தி உள்ளேன்.

இதேபோல் நல்லெழுந்தூர் சோனியாகாந்தி நகர் பகுதியிலும் பலருக்கு பட்டா வழங்குவது குறித்தும் ஆலோசனை கூறியுள்ளேன். திருநள்ளாறு தொகுதியில் மட்டும் புதிதாக 500 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஒரு சில பகுதிகளில் மனைப்பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்ட நிலம் மண்கொட்டி மேம்படுத்தப்பட்டு வருகிறது. மனைப்பட்டா யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்று துறைரீதியிலான பட்டியல் தயாரிக்கப்படுகிறது. விரைவாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நகரத்துக்கு இணையாக கிராமங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தில் திருநள்ளாறு தேர்வு செய்யப்பட்டு, மத்திய, மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் மேலும் ரூ.9 கோடி நிதி கிடைத்துள்ளது. இதில், நல்லம்பல் ஏரி ரூ.1½ கோடி செலவில் தூர்வாரப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்