ஆம்னி பஸ்- மினி லாரி மோதல், மேலும் ஒரு வடமாநில தொழிலாளி சாவு - பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது
கள்ளக்குறிச்சியில் ஆம்னி பஸ்- மினி லாரி மோதிய விபத்தில் மேலும் ஒரு வடமாநில தொழிலாளி இறந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
விழுப்புரம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தாராபுரத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபடுவதற்காக வடமாநில தொழிலாளர்கள் ஒரு மினி லாரியில் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து கடந்த 17-ந் தேதி இரவு தாராபுரத்துக்கு புறப்பட்டனர்.
இந்த மினி லாரி, நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கள்ளக்குறிச்சியில் உள்ள ஏமப்பேர் புறவழிச்சாலையில் சென்றபோது கோவையில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற தனியார் ஆம்னி பஸ்சும், மினி லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ் டிரைவரான திருநெல்வேலி மாவட்டம் மாயன்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 56), மினி லாரி டிரைவரான மதுரை தெய்வநாயகபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (32) மற்றும் மினி லாரியில் வந்த ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் உண்டாவிலே கிராமத்தை சேர்ந்த முகேந்தர்முனியா (35), தருர்ரஜாத் (30) உள்பட 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் சீசை பகுதியை சேர்ந்த சுக்குதேவ்ரஜாத் (53), பப்லுரஜாத் (27), மங்கல்தாகா பகுதியை சேர்ந்த சாம்தேவ் (30), விருதுநகர் கோவிந்தநல்லூரை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (33), தெய்வநாயகபுரம் லிங்கன் (35), ஆம்னி பஸ்சில் வந்த மாற்று டிரைவர் கோவை கிளாங்குறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் (28) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் இவர்களில் ரவிச்சந்திரன் கோவையில் உள்ள மருத்துவமனைக்கும், மீனாட்சிசுந்தரம், சுக்குதேவ்ரஜாத், சாம்தேவ் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், பப்லுரஜாத் சென்னை அரசு மருத்துவமனைக்கும் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பப்லுரஜாத்திற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் 8 பேரின் உடல்களும் நேற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவர்களது உடல்கள் ‘எம்பார்மிங்’ செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் 8 பேரின் உடல்களும் சென்னை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோல் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பப்லுரஜாத்தின் உடலும் பிரேத பரிசோதனைக்கு பின் ‘எம்பார்மிங்’ செய்யப்பட்டு விமானம் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.