திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை மரங்கள் சாய்ந்தன; போக்குவரத்து பாதிப்பு

குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.;

Update: 2019-07-19 21:45 GMT
நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. ஆனாலும் பெரிய அளவிலான மழை பெய்யாமல் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மழை பெய்யாமல் வெயில் அடித்தது. இதனால் தென்மேற்கு பருவ மழை பொய்த்து விடுமோ என்ற கவலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருகின்றது. அதிலும் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளான மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, அருமனை, குலசேகரம், கொல்லங்கோடு, நித்திரவிளை, கிராத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதி, மலையோர பகுதிகள் என அனைத்து இடங்களிலும் மழை பொழிந்தது.

நாகர்கோவிலில் இரவு தொடங்கிய மழை மறுநாள் மதியம் வரை விட்டு விட்டு பெய்தது. இதனால் காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் கையில் குடைப்பிடித்தபடி நடந்து சென்றனர். மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் ஓடியது. மேலும் பகலில் சூரியன் தெரியாத அளவுக்கு வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன. இந்த மழையால் குமரி மாவட்டத்தில் நேற்று குளுமையான சீதோஷ்ணம் நிலவியது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்-19.3, இரணியல்-12.4, ஆனைகிடங்கு-25.2, குளச்சல்-14.4, குருந்தன்கோடு-14.4, அடையாமடை-27, கோழிப்போர்விளை-38, முள்ளங்கினாவிளை-30, புத்தன்அணை-9.4, திற்பரப்பு-26.4, பூதப்பாண்டி-8.6, சுருளோடு-16.2, கன்னிமார்-10.2, பாலமோர்-31.4, மயிலாடி-7.2, கொட்டாரம்-8.4 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

இதே போல அணை பகுதிகளில் பேச்சிப்பாறை-15.2, பெருஞ்சாணி-11.8, சிற்றார் 1-18, சிற்றார் 2-17, மாம்பழத்துறையாறு-24 என்ற அளவில் மழை பதிவானது.

மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகமானது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 470 கனஅடி, பெருஞ்சாணி அணைக்கு 260 கனஅடி, சிற்றார்-1 அணைக்கு 6 கனஅடி, சிற்றார்-2 அணைக்கு 13 கனஅடி, மாம்பழத்துறையாறு அணைக்கு 1 கனஅடியும் தண்ணீர் வந்தது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 460 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 320 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு உள்ளது.

மழை பெய்தபோது பலத்த காற்றும் வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. அதாவது வில்லுக்குறி அரசு தொடக்கப்பள்ளி முன் நின்ற தேக்கு மரம் ஒன்று பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் முறிந்து அருகில் இருந்த மின் கம்பம் மீது விழுந்தது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின் வெட்டு ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மின் விபத்து எதுவும் ஏற்படவில்லை. மின் வெட்டு காரணமாக அப்பகுதி மக்கள் வெகு நேரமாக அவதிப்பட்டனர். பின்னர் நேற்று காலை மின்வாரிய ஊழியர்கள் வந்து மரத்தை வெட்டி அகற்றினர். மேலும் மின்கம்பமும் நடப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டது.

இதே போல கிராத்தூர் வெங்குளம்கரை பகுதியில் மேற்கு கடற்கரை சாலையோரம் நின்ற அயனி மரம் காற்றில் முறிந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இதன் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன. இதனையடுத்து கொல்லங்கோடு மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் மார்த்தாண்டம், களியக்காவிளை, அருமனை, குலசேகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக ரப்பர் பால்வெட்டும் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல இயலவில்லை. இதனால் பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டது. அதோடு தடிக்காரன்கோணம் பகுதியில் பலத்த காற்றுக்கு ஏராளமான வாழைகள் முறிந்து விழுந்து நாசமாகின. மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அதோடு நாகர்கோவில் ஒழுகினசேரி சந்திப்பில் வைக்கப்பட்டு இருந்த போலீஸ் பூத் பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சாய்ந்து அருகே நின்ற ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ சேதம் அடைந்தது.

மேலும் செய்திகள்