கருவேப்பிலங்குறிச்சி அருகே, அங்கன்வாடி பொறுப்பாளர் வீட்டில் திருட முயற்சி - போலீசார் விசாரணை
கருவேப்பிலங்குறிச்சி அருகே அங்கன்வாடி பொறுப்பாளர் வீட்டில் மர்மநபர்கள் திருட முயன்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்,
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஆலந்துரைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 63), விவசாயி. இவரது மனைவி தமிழரசி(56). இவர் அங்கன்வாடி பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியனும், தமிழரசியும் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை யாரோ உடைத்துக் கொண்டிருந்தனர். இந்த சத்தம் கேட்டு எழுந்த இருவரும், மின்விளக்குகளை போட்டு விட்டு, வீட்டின் பின்புறம் சென்று பார்த்தனர். அப்போது அங்கு யாரையும் காணவில்லை. ஆனால் வீட்டின் பின்புற கதவு உடைந்திருந்தது. மேலும் அதன் அருகில் கதவை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்கள் கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும், உடனே கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள், சுப்பிரமணியன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் சுப்பிரமணியனும், தமிழரசியும் சத்தம் கேட்டு எழுந்த வந்ததை அறிந்த மர்மநபர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணியன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், தமிழரசி கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்து சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.