கேரளாவில் மீன்பிடிக்க சென்ற போது படகு உடைந்தது: கடலில் மூழ்கிய 3 குமரி மீனவர்களின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
கேரளாவில் மீன்பிடிக்க சென்ற போது படகு உடைந்தது. இதனால் கடலில் மூழ்கிய 3 குமரி மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
கருங்கல்,
குமரி மாவட்டம் நீரோடி பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி. இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இவரும் அதே பகுதியை சேர்ந்த நிக்கோலஸ், ராஜூ, ஜான் போஸ்கோ, சகாயம் ஆகிய 5 பேரும் கேரள மாநிலம் நீண்டகரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 17-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் துறைமுக முகத்துவாரம் பகுதியை நெருங்கிய போது பயங்கர கடல்சீற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து படகில் இருந்தவர்கள், கரையில் உள்ளவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கரை பகுதியில் உள்ள நிலவரத்தை விசாரித்தனர். அப்போது, கரையில் இருந்தவர்கள் துறைமுகம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதாகவும், எனவே பாதுகாப்பான இடத்தில் ஒதுங்குமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலையில் குமரி மீனவர்களின் படகு உடைந்த நிலையில் துறைமுக அலைதடுப்பு சுவரில் கிடந்தது. அதில் இருந்த 5 மீனவர்களையும் காணவில்லை. இதை பார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் மீனவர்களை தேடி சென்றனர். இதற்கிடையே மாயமான மீனவர்களில் ஸ்டான்லி, நிக்கோலஸ் ஆகியோர் மிகவும் ஆபத்தான நிலையில் நீந்தி கரை சேர்ந்தனர். அவர்களை கடலோர காவல்படையினர் மீட்டு கொல்லத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடலில் மூழ்கி மாயமான மற்ற 3 மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் மற்றும் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 3 மீனவர்களை பற்றி எந்தவொரு தகவலும் இல்லாததால் நீரோடி மீனவர்கள் சோகமாக உள்ளனர்.