கெங்கவல்லி அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு
கெங்கவல்லி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கெங்கவல்லி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் உள்ள கான்கிரீட் சுவருக்கு குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சிககொண்டிருந்தார்.
பின்னர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மனைவி சித்ராவை (வயது 40) சுவருக்கு தண்ணீர் பாய்ச்ச சொல்லிவிட்டு சென்றார். அப்போது மோட்டாரை போடுவதற்காக ‘சுவிட்சை ஆன்‘ செய்தபோது எதிர்பாராதவிதமாக சித்ராவை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து சின்னதம்பி அங்கு வந்தார். அப்போது மின்சாரம் தாக்கி சித்ரா உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது மனைவியை கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.