காமராஜர் பெயரை சொல்லாமல் யாராலும் ஆட்சியை நடத்த முடியாது சேலத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
காமராஜர் பெயரை சொல்லாமல் யாராலும் ஆட்சியை நடத்த முடியாது என்று சேலத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்ட காமராஜ் அறக்கட்டளை சார்பில் காமராஜரின் 117-வது பிறந்தநாள் விழா நேற்று சேலம் தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் குட்டப்பட்டி ஆர்.நாராயணன் வரவேற்றார். விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கினார்.
செயல்தலைவர் மோகன்குமாரமங்கலம், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், சேலம் மாநகர காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி தொடர வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புகின்றனர். இல்லையெனில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவராவது கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டும்.
காமராஜர் போன்று ஒரு சிறந்த முதல்-அமைச்சர் இனிமேல் வரமுடியாது. விவசாயிகள் நலனுக்காகவும், குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல அணைகளை கட்டியவர் காமராஜர். தமிழகத்தில் தற்போது லஞ்சம் வாங்குவது அதிகரித்து விட்டது.
காமராஜர் பெயரை சொல்லாமல் யாராலும் ஆட்சியை நடத்த முடியாது. காமராஜரை கொல்ல முயன்றவர்கள் அவரின் பெயரை உச்சரிக்க தகுதியில்லாதவர்கள். காங்கிரசுக்கு தலைமை இல்லாமல் இருப்பது பா.ஜனதாவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோசடி செய்து தேர்தலில் மோடி வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் செய்த பல திட்டங்களால் தான் தற்போது பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறோம். உருக்காலையை ஏலத்திற்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ரெயில்வேயையும் தனியார் மயம் ஆக்கிவிடுவார்கள். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் ‘காலத்தின் கடைசி கருணை‘ என்ற தலைப்பில் பேராசிரியர் ரவிக்குமாரும், ‘தூய்மையான துருவ நட்சத்திரம்‘ என்ற தலைப்பில் பேராசிரியை உமா தேவராஜனும் பேசினார். இதில் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகன், கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, குட்டப்பட்டி ஜி.சிவகுமார், முன்னாள் எம்.பி., தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, புவனா ஜெயராமன், பழனிமுத்து, சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் மணி மற்றும் அறக்கட்டளை நிர்வாகி கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.