சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆதிதிராவிடர்களுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் கலந்து கொண்டார்.

Update: 2019-07-19 23:00 GMT
சேலம், 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆதி திராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உள்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் ஆதிதிராவிடர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், ஆதி திராவிடர் மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடன் தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் கேட்டறிந்தார்.

கூட்டத்திற்கு பின்பு தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை பொருத்தவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வழக்குகளுக்கு தீர்வு தொகையாக ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதை தவிர இதர சலுகைகள் சில இடங்களில் கொடுக்கப்பட்டும், சில இடங்களில் இவற்றை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. இதர சலுகைகள் என்பது பாதிக்கப்பட்டவர்களுடைய வாரிசுதாரர்களின் கல்வி தகுதிக்கேற்ப 3 மாதத்திற்குள் அரசு வேலை வழங்க வேண்டும் என்பது அரசு ஆணையின்படி உள்ளது.

வாரிசுதாரர்களுக்கு கல்வி, வீடு, நிலம் உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதும் புது விதியில் உள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 7 இறப்பு சம்பவங்களுக்கு உள்ளன. இந்த 7 சம்பவங்களும் ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் தீர்வு தொகையானது வழங்கப்பட்டு விட்டது. சிலவற்றில் 3 சம்பவங்கள் 2016-க்கு பிறகு நடந்திருப்பதால் புது விதியின் அடிப்படையில் அவர்களுக்கு அரசு வேலை வேண்டி குறிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 2 மேல்நிலைப்பள்ளிகளும், 2 உயர்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தின் முடிவாக இருக்கின்றது. பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புத்துணர்ச்சி வகுப்புகள் நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2,800 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் மூலம் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 250 வீடுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.75 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.28,080 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களையும், சமூக பாதுகாப்புத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, வருவாய்த்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா, சேலம் மாநகராட்சியின் மூலம் 7 பயனாளிகளுக்கு ஈமச்சடங்கு நிதியுதவியாக ரூ.17,500 என பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.23.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் வழங்கினார்.

மேலும் செய்திகள்