ராமநாதபுரம் அருகே பரிதாபம், கடனை திரும்ப செலுத்த முடியாததால் விவசாயி தற்கொலை
வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் விவசாயி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை கிழக்குதெரு பகுதியை சேர்்ந்தவர் துளசிராமன்(வயது 45). இவருக்கு பார்வதி என்ற மனைவியும், சண்முகநாதன் (15), அழகுசுந்தரம் (13) என்ற மகன்களும் உள்ளனர்.
துளசிராமன் கடந்த 3 ஆண்டுகளாக தனது நிலத்தில் நெல் மற்றும் பருத்தி விவசாயம் செய்து வந்தார். விவசாயம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் நகைகளை வைத்து வங்கியில் கடன் வாங்கியும், வெளியில் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியும் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மழையின்றி பயிர்கள் கருகி போனது. இந்த ஆண்டாவது விவசாயம் கைகொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மழையின்றி விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டதால், கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடன் தொல்லையால் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு துளசிராமன் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி பார்வதி அளித்த புகாரின் பேரில் திருஉத்தரகோசமங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.