விவசாயியை கொன்ற உறவினருக்கு ஆயுள் தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
விவசாயியை வெட்டிக்கொலை செய்த உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள மஞ்சள்ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது56). இவர் குகன்பாறையை சேர்ந்த லிங்கம்மாள் என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கும் அதே ஊரில் வசித்த இவரது உறவினர் ராமசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ராமசாமி மோட்டார் சைக்கிளில் செல்லும்போது கீழே விழுந்து பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.
ராமசாமியின் உயிரிழப்பிற்கு காரணம் ராமச்சந்திரன் தான் என நினைத்த ராமசாமியின் மகனும் மரம் வெட்டும் தொழிலாளியுமான ராமமூர்த்தி (38) அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 23.11.2011 அன்று காலை ராமச்சந்திரன் குத்தகை நிலத்தில் வேலை செய்ய சென்ற போது எதிரே வந்த ராமமூர்த்தி அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி என்.பாரி குற்றம்சாட்டப்பட்ட ராமமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.