சிக்கன நடவடிக்கை காரணமாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு - மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
வைகை அணை நீர்மட்டம் சரிந்துவிட்டதால் சிக்கன நடவடிக்கையாக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை மாநகரின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ராட்சத குழாய்கள் வழியாக மதுரை மாநகருக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தேனி நகராட்சி, ஆண்டிப்பட்டி பேரூராட்சி, சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், பெரியகுளம் நகராட்சி ஆகிய பகுதிகளுக்கும் வைகை அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் போதுமான மழை இல்லாத காரணத்தால் வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாமல் காணப்படுகிறது. எனவே வைகை அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் ‘கிடுகிடு’வென சரிந்து கொண்டே வருகிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 27 அடியாக சரிந்துள்ளது. அணையில் தற்போது இருப்பு உள்ள தண்ணீர் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் தண்ணீரை கொண்டு அடுத்து வரும் 50 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வினியோகம் செய்ய முடியும். பெரிதும் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழையும் தொடர்ந்து ஏமாற்றி வருவதால், வைகை அணை நீர்மட்டம் மேலும் சரியும் வாய்ப்புள்ளது.
எனவே இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை வினாடிக்கு 60 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது வினாடிக்கு 40 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குடிநீர் தேவைக்காக வைகை அணையை மட்டுமே நம்பியுள்ள மதுரை மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், மதுரையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நாட்களின் இடைவெளி அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வைகை அணை நீர்மட்டம் உயரும் வரையில் இந்த சிக்கன நடவடிக்கை தொடரும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
நேற்றுக்காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 27.72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 28 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 40 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீர்இருப்பு 287 மில்லியன் கனஅடியாக இருந்தது.