நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன் தினம் வினாடிக்கு 530 கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று காலை 8 மணி அளவில் வினாடிக்கு 2 ஆயிரத்து 301 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 58.99 அடியாக உள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 1,000 கனஅடியும், வாய்க்காலுக்கு 5 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததாலும், நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.