கணவன்-மனைவி தகராறு, கொதிக்கும் கஞ்சியை ஊற்றியதில் 2 மாத பெண் குழந்தை சாவு - பண்ருட்டி அருகே பரிதாபம்

பண்ருட்டி அருகே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கொதிக்கும் கஞ்சியை ஊற்றியதில் 2 மாத பெண் குழந்தை இறந்தது.

Update: 2019-07-18 22:30 GMT
பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 35). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அம்சவள்ளி (30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அதன்பிறகு கர்ப்பமான அம்சவள்ளிக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அனுஸ்ரீ என்று பெயரிட்டு அந்த குழந்தையை விஜயன், அம்சவள்ளி தம்பதியினர் வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் அனுஸ்ரீக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் போனது. அதையடுத்து குழந்தையை விஜயனும், அம்சவள்ளியும் சிகிச்சைக்காக பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்காக கொடுக்கப்பட்ட மருந்து சீட்டுகளை கேட்டனர். அதற்கு அம்சவள்ளி கொண்டு வரவில்லை என்று கூறினார்.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்பு விஜயனும், அம்சவள்ளியும் குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் அம்சவள்ளி சமையல் செய்து கொண்டு இருந்தார். அந்த சமயத்திலும் கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, கொதிக்கும் கஞ்சியை எடுத்து விஜயன் மீது ஊற்றினார். அந்த சமயத்தில் விஜயன், தனது குழந்தையை கையில் வைத்திருந்தார். கொதிக்கும் கஞ்சி விஜயன் மீதும், குழந்தை மீதும் பட்டது. இதில் இருவரது உடல்களும் வெந்தது.

உடனடியாக இருவரும் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை அனுஸ்ரீ நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தது.

இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்