காலிமனைகளில் கொட்டப்படும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
காலிமனைகளில் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பரவியதை தொடர்ந்து காலிமனைகளில் குப்பை கொட்டுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் ஆய்வுகளை நடத்தி காலிமனைகளின் உரிமையாளர்களுக்கு அபராதங்களை விதித்தனர்.
இதனால் காலி மனைகளில் குப்பை கொட்டுவது ஓரளவு தடுக்கப்பட்டது. சமீப காலங்களாக அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் காலிமனைகளில் குப்பை கொட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள காலிமனைகளில் குப்பை கொட்டுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. அதை நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வதாக இல்லை.
குறிப்பாக வள்ளலார் சாலையில் துணை மின் நிலையம் எதிரே உள்ள காலிமனை ஒன்றில் மலைபோல் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. சிலர் இறைச்சி கழிவுகளையும் அங்கு கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதன் காரணமாக நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.