வெளிநாடு தப்ப முயன்ற தாதா தாவூத் இப்ராகிம் தம்பி மகன் கைது விமான நிலையத்தில் பிடிபட்டார்

தொழில் அதிபரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி மகனை போலீசார் கைது செய்தனர். அவர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது மும்பை விமான நிலையத்தில் சிக்கினார்.

Update: 2019-07-18 22:45 GMT
மும்பை,

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி பாகிம் மச்மச். இவர் கடந்த 2017-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அந்த தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், தாதாக்கள் தாவூத் இப்ராகிம், சோட்டா சகீல் ஆகியோருக்காக ஹவாலா பணபரிமாற்றம் செய்து வந்தவருமான அப்ரோஸ் வடாரியா என்பவருக்கு தொடர்பு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

மும்பை போலீசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த அப்ரோஸ் வடாரியா கடந்த 16-ந் தேதி துபாயில் இருந்து மும்பை வந்த போது, விமான நிலையத்தில் வைத்து போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய இந்த வழக்கில் தாதா தாவூத் இப்ராமின் தம்பி இக்பால் காஸ்கரின் மகன் ரிஸ்வான் காஸ்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நேற்றுமுன்தினம் இரவு அவரை பிடிக்க சென்றனர். அப்போது அவர் வெளிநாடு தப்பி செல்ல மும்பை விமான நிலையம் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலையத்திற்கு சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். ரிஸ்வான் காஸ்கரை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை வருகிற 22-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரிஸ்வான் காஸ்கரின் தந்தை இக்பால் காஸ்கர் கட்டுமான அதிபர்களிடம் பணம் பறித்த வழக்கில் கைதாகி தானே சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்