குடும்பத்தகராறில் டிபன் கடைக்காரர் வெட்டிக்கொலை

தண்டையார்பேட்டையில், குடும்பத் தகராறில் டிபன் கடைக்காரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;

Update: 2019-07-18 22:45 GMT
பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெரு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு 6-வது பிளாக்கில் வசித்து வந்தவர் பெருமாள்(வயது 45). இவருடைய மனைவி ரோஜா. இவர்களுக்கு பரத் மற்றும் சரவணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். பெருமாள் வீட்டின் அருகிலேயே டிபன் கடை நடத்தி வந்தார்.

ரோஜாவின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (62) என்பவருக்கும், பெருமாளுக்கும் குடும்பத் தகராறில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இது தொடர்பாக பெருமாள், ஏழுமலை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை, நேற்று மாலை பெருமாள் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெருமாளை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பெருமாள், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையான பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான ஏழுமலையை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்