கிருஷ்ணகிரியில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

கிருஷ்ணகிரியில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தையை, குப்பம் போலீசார் மீட்டு திருப்பதி குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்தனர்.

Update: 2019-07-18 22:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 38), பெயிண்டர். இவருடைய மனைவி முத்துலட்சுமி(32). முத்துலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இதே போல், குமரேசனுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

குமரேசன், முத்துலட்சுமி சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களுக்கு 14 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு, ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து குப்பத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் வின்சென்ட் சுந்தர்ராஜ், சைல்டு லைன் அலுவலர்கள், மகாராஜகடை போலீசார், குழந்தையை வாங்கியவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் விற்கப்பட்ட குழந்தை, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருப்பது தெரிய வந்தது. மேலும், குழந்தையை வாங்கியவர்கள் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தாலும், திடீரென ரூ.25 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே குழந்தையை ஒப்படைப்போம் என கூறினார்கள்.

இது தொடர்பாக குப்பம் போலீசாரிடம் தெரிவித்த போது, அவர்களும் ரூ.25 ஆயிரத்தை செலுத்திவிட்டு குழந்தையை வாங்கி செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழுத்தலைவர் வின்சென்ட் சுந்தர்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் போனில் தொடர்பு கொண்டு விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டு தருமாறு கேட்டு கொண்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று குப்பம் போலீசார், கர்நாடக மாநிலம் பெல்லாரி சென்று அந்த குழந்தையை மீட்டு, திருப்பதியில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்தனர். அங்கு முறையாக பதிவு செய்துவிட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் அந்த குழந்தையை ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்