தேன்கனிக்கோட்டை அருகே கள்ளத்துப்பாக்கிகள் தயாரித்தவர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே கள்ளத்துப்பாக்கிகள் தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-18 22:15 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கெத்தள்ளி. இந்த ஊரின் அருகில் உள்ளது மேலூர் கிராமம். இந்த பகுதியில் கள்ளத்துப்பாக்கிகள் தயார் செய்து விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் மேலூர் கிராமத்தைச் சுற்றி திடீரென்று சோதனை நடத்தினார்கள். இதில் மேலூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்கிற கிருஷ்ணா (வயது 38) என்பவரின் வீட்டை சோதனை செய்த போது அவரது வீட்டில் துப்பாக்கிகளை செய்ய பயன்படுத்தும் உதிரிபாகங்கள், கள்ளத்துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை பிடித்த நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ராமகிருஷ்ணனை தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா முன்னிலையில் ஒப்படைத்தனர். மேலும் கள்ளத்துப்பாக்கி மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தும் உதிரிபாகங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து ராமகிருஷ்ணனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்