பொதுமக்களிடம் நேரடியாக குறைகேட்கும் திட்டம் நாராயணசாமி தொடங்கி வைத்தார்

ரேஷன் கார்டுகள் குளறுபடி, அரசு துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொதுமக்களிடம் நேரடியாக குறைகேட்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-18 22:30 GMT
வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலத்தில் வருவாய் மற்றும் நலத்துறை இணைந்து அரசின் மற்ற துறைகளை ஒருங்கிணைத்து மக்கள் குரல் என்ற பெயரில் மக்கள் குறைகேட்பு கூட்டத்தை சட்டமன்ற தொகுதிகள் வாரியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதாவது மக்களை அந்தந்த தொகுதிகளுக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் நேரில் சென்று குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வார்கள். அதன்படி ரேஷன் கார்டுகள் குளறுபடி, அரசு துறை உதவிகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த குறைகேட்பு கூட்டத்தில் தீர்வு காணப்படும்.

இந்த திட்டம் மாநிலத்தில் முதன் முறையாக நெட்டப்பாக்கத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன், விஜயவேணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலத்துறை செயலாளர் ஆலிஸ்வாஸ் வரவேற்று பேசினார். குறைதீர்ப்பு கூட்டம் குறித்து வருவாய்த்துறை செயலர் அசோக்குமார், மாவட்ட கலெக்டர் அருண் ஆகியோர் விளக்கி பேசினர்.

இந்த நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விதை, உரம் கிடைக்க வேண்டும், விவசாய பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவேண்டும் போன்ற பிரச்சினைகள் உள்ளது. குடிமைப்பொருள் துறையில் ரேஷன் கார்டு குளறுபடி மற்றும் பெயர், முகவரி மாற்றம் தொடர்பாக பிரச்சினைகளுக்கும், வருவாய் துறையில் பட்டா மாற்றம், குடியுரிமை சான்றிதழ் போன்றவைகளுக்கும் இந்த கூட்டத்தில் தீர்வு காணப்படும்.

இது தவிர அரசு துறைகள் மூலம் தொழில் தொடங்குவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கவும் இந்த கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும். விரைவில் புதுவை மாநிலத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த மடுகரை, சூரமங்கலம், கரியமாணிக்கம், கல்மண்டபம், ஏரிப்பாக்கம், பண்டசோழ நல்லூர், கரையாம்புத்தூர், நத்தமேடு உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகள் தொடர்பாக புகார் மனுக்களை முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் வழங்கினர்.

இதில் பெரும்பாலும் மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, விவசாய பிரச்சினை தொடர்பான மனுக்கள் இருந்தன. இந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவிட்டார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வருவாய்துறை, பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை, வேளாண்துறை, குழந்தைகள் நலம் மற்றும் மேம்பாடு, ஆதிதிராவிட நலத்துறை உள்பட 23 துறைகளை சேர்ந்த உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்