மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-18 23:00 GMT
நாமக்கல், 

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு மருத்துவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் லீலாதரன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் ரெங்கசாமி, மகேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த கோரியும், அரசு டாக்டர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா விதிப்படி மட்டும் அல்லாமல், நோயாளிகள் சேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் பணி இடங்களை அதிகப்படுத்த வேண்டும். பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாக்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அதேபோல் மேற்படிப்பு படித்து விட்டு வரும் டாக்டர்களுக்கு கலந்தாய்வு மூலம் அவர்கள் விரும்பும் இடம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவ சங்க மாநில நிர்வாகி டாக்டர் ரங்கநாதன், மாவட்ட செயலாளர் ரகுகுமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் வெளிநோயாளிகள் பிரிவில் 2 மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆஸ்பத்திரிகளில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். அரசு டாக்டர்களின் இந்த போராட்டம் காரணமாக புறநோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் செய்திகள்