பெருந்துறை அருகே பரபரப்பு சம்பவம், காதல் கணவரை தாக்கிவிட்டு மனைவி காரில் கடத்தல் - மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
பெருந்துறை அருகே காதல் கணவரை தாக்கிவிட்டு, மனைவியை மர்மகும்பல் கடத்திச்சென்றது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெருந்துறை,
கோபியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் பிருந்தா (வயது 20). இவர் பெருந்துறையை அடுத்த திங்களூர் அருகே நிச்சாம்பாளையம் களுக்குத்தோட்டம் பகுதியில் உள்ள உறவினரான சரவணன் என்பவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்து உள்ளார். அப்போது அதேப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் தினேசுக்கும் (22), பிருந்தாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டுக்கு தெரியவந்தது. இதில் பிருந்தாவும், தினேசும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் காதலில் உறுதியாக இருந்த 2 பேரும் கடந்த மே மாதம் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் அவர்கள் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு ஈரோடு மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், காதல் திருமணம் செய்த ஜோடியின் பெற்றோர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில், பெண்ணின் வீட்டில் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இதைத்தொடர்ந்து பிருந்தாவும், தினேசும் நிச்சாம்பாளையம் களுக்குத்தோட்டம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 பேரும் பவானி கூடுதுறைக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர். பெருந்துறை அருகே உள்ள சிட்டாம்பாளையம் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று, தினேஷ் சென்ற காரை வழிமறித்தபடி நின்றது. பின்னர் திடீரென காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல், தினேசையும், பிருந்தாவையும் காரில் இருந்து வெளியே இழுத்தனர். அதன்பின்னர் அவர்கள் தினேசை தாக்கிவிட்டு, அவருடைய கண்முன்னே காதல் மனைவி பிருந்தாவை காரில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திங்களூர் போலீசில் தினேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிருந்தாவையும், அவரை கடத்திய மர்மகும்பலையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காதல் கணவரை தாக்கிவிட்டு மனைவியை மர்ம கும்பல் சினிமா பாணியில் காரில் கடத்திச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.