பரங்கிப்பேட்டை பகுதியில், மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் கைது
பரங்கிப்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் களை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை,
பண்ருட்டி அருகே உள்ள அரசடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை மகன் ஜெயசூர்யா(வயது 21). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அன்னங்கோவிலுக்கு வந்தார். அப்போது அங்கு சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பின்னர், திரும்பி வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் பரங்கிப்பேட்டை நகர பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு சிறுவன் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தான். இதனால் சந்தேகத்தின் பேரில், அந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில், அவன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தான். இதையடுத்து அவனை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது, பரங்கிப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவனிடம் இருந்த மோட்டார் சைக்கிள் ஜெயசூர்யாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
மேலும் பரங்கிப்பேட்டை பகுதியில் 5 மோட்டார் சைக்கிளை திருடி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.