குடிபோதையில், காரில் கடத்தி சென்று போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது ஒருவருக்கு வலைவீச்சு

போக்குவரத்து போலீஸ்காரரை காரில் கடத்தி சரமாரியாக தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ஒருவரைவலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-17 22:45 GMT
மும்பை,

மும்பை செம்பூர் செட்டாநகர் பகுதியில் நேற்று முன்தினம் காலை விகாஷ் முண்டே என்பவர் உள்பட போக்குவரத்து போலீசார் 3 பேர் பணியில் இருந்தனர். அப்போது சாலையின் நடுவே கார் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்ததது. இதை கவனித்த போலீஸ்காரர் விகாஷ் முண்டே அங்கு சென்றார்.

அப்போது, காருக்குள் 3 பேர் இருக்கையில் சாய்ந்து கிடந்தனர். கதவை திறந்து காரின் பின் இருக்கையில் அமர்ந்த போலீஸ்காரர் விகாஷ் முண்டே, காரை ஓரமாக நிறுத்தும்படி சத்தம் போட்டார்.

இதனால் கோபம் அடைந்த கார் டிரைவர் திடீரென காரை வேகமாக எடுத்து கிழக்கு விரைவு சாலையில் ஓட்டிச் சென்றார். அப்போது பின் இருக்கையில் இருந்த இருவரும் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கினார்கள்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற போலீஸ்காரர்கள் இருவரும் காரை விரட்டி சென்றனர். மேலும் இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில், போலீஸ்காரர் விகாஷ் முண்டேவை கடத்தி சென்ற காரை உதவி போலீஸ் கமிஷனர் வெங்கட் பாட்டீல் தலைமையிலான போலீஸ் குழு மடக்கியது. அப்போது காரில் இருந்து இறங்கி ஒருவர் தப்பியோடி விட்டார். தப்பி ஓட முயன்ற மற்ற 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீஸ்காரர் விகாஷ் முண்டேயை மீட்டனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கைதானவர்கள் தானேயை சேர்ந்த விஜய் ஷிண்டே, குரவ் புஞ்ச்வானி என்பதும், தப்பியோடியவர் அவர்களது நண்பர் ராஜ் என்பதும் தெரியவந்தது. மும்பை கிராண்ட்ரோட்டில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவர்கள் குடிபோதையில் காரை நடுரோட்டில் நிறுத்தியிருந்ததும் தெரியவந்தது.

இதன்பின்னர் போலீசார் கைதான இருவரையும் திலக் நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்