செங்குன்றத்தில் லாரி மோதி பள்ளி ஆசிரியை பலி; கணவர் கண் எதிரே பரிதாபம்

செங்குன்றத்தில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி கணவர் கண் எதிரேயே தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார். அவருடைய கணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-07-17 22:30 GMT

செங்குன்றம்,

செங்குன்றம் எம்.ஏ.நகர் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி லதா (வயது 38). இவர், அம்பத்தூரை அடுத்த புதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை லதா, தனது கணவர் பிரபுவுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். செங்குன்றம் புழல் ஏரி ஜங்‌ஷன் ஜி.என்.டி. சாலை அருகே அம்பத்தூர் நோக்கி சென்றபோது, சோழவரத்தில் இருந்து புழல் நோக்கி வந்த மினி லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ஆசிரியை லதா, கணவர் கண்எதிரேயே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த பிரபு, எம்.ஏ.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து மினி லாரி டிரைவரான நெல்லையை சேர்ந்த மகேந்திரன் (39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்