விபத்தில் காயம் அடைந்தவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு சன்மானம் திருச்சி சரக டி.ஐ.ஜி. தகவல்

விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று திருச்சி சரக டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

Update: 2019-07-17 22:15 GMT
திருச்சி,

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் திருச்சி சரகத்துக்குட்பட்டு உள்ளன. இந்த 5 மாவட்டங்களிலும் தேசிய நெடுஞ்சாலை, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் இதர சாலைகள் உள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் விபத்துகளும் அதிக அளவில் ஏற்படுகிறது. விபத்துகளில் காயம் அடைபவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடந்த 478 விபத்துகளில் 116 பேர் இறந்துள்ளனர். 729 பேர் காயம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நடந்த 624 விபத்துகளில் 118 பேர் இறந்துள்ளனர். 717 பேர் காயம் அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஜூன் மாதம் வரை நடந்த 459 விபத்துகளில் 155 பேர் இறந்துள்ளனர். 451 பேர் காயம் அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த 230 விபத்துகளில் 42 பேர் இறந்துள்ளனர். 351 பேர் காயம் அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நடந்த 249 விபத்துகளில் 43 பேர் இறந்துள்ளனர். 371 காயம் அடைந்துள்ளனர்.

சன்மானம் வழங்கப்படும்

காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் ஏற்படும் காலதாமதத்தால் அதிகமானோர் இறந்து விடுவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனை தவிர்ப்பதற்கு 108 ஆம்புலன்ஸ், விபத்து நடக்கும் இடத்துக்கு விரைவாக வருவதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் ஆம்புலன்சின் தொலைபேசி எண்களை ஒவ்வொரு சாலையிலும் அனைவருக்கும் தெரியும்படி எழுதி வைக்க அல்லது விளம்பர பதாகை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. போலீசாருக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் முதலுதவி பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் விபத்து நடக்கும் அனைத்து இடத்துக்கும் உடனே செல்வதற்கு சாத்தியகூறு இல்லை என்பதால் காலதாமதத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க விபத்து நடக்கும் இடத்தில் இருக்கும் அல்லது அந்த வழியே செல்லும் பொதுமக்கள் சம்பவ இடத்தை ஒரு போட்டோ எடுத்துவிட்டு காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும். மேலும், விபத்து நடந்த இடத்தில் உதவி செய்பவர்களை சாட்சிக்காக மற்றும் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கோ அல்லது போலீஸ் நிலையத்துக்கோ வருமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். யாரும் பயப்படத் தேவையில்லை. இவ்வாறு விபத்து நடந்த இடத்தில் தக்க தருணத்தில் அதாவது கோல்டன் ஹவர்சில் (விபத்து நடந்த ஒரு மணிநேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல்) உதவும் பொதுமக்களுக்கு காவல்துறை மூலம் தக்க சன்மானம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்